விபஸ்ஸனா தியான முறை
Vipassana Meditation

சயாக்யி ஊ பா கின் அவர்கள் வழிமுறைப்படி
திரு ச.நா.கோயங்கா அவர்களால் கற்றுக்கொடுக்கப்படும் தியான முறை

எழுத்துரு உதவி (Font help)  |   International Website   |   அச்செடுக்க உகந்த பிரதி (Printable version)

முகப்பு விபஸ்ஸனா - ஓர் அறிமுகம் ஆசிரியரைப் பற்றி... 'வாழும் கலை' (உரை) ஒழுக்க நெறி செய்தி மடல்கள் சென்னை மையம் மற்ற ஊர்களில்... சேர்வதற்கான தகுதிகள் விண்ணப்பித்தல் நன்கொடை சிறுவர் முகாம்கள்

சென்னை மையம்

பொருளடக்கம்

வசதிகள் மைய முகவரி நகர் அலுவலகம் அமைந்திருக்கும் இடம் சென்னை தட்பவெப்பநிலை பயிற்சி பெறுபவர்களுக்கு அளிக்கப்படுபவை பயிற்சி பெறுபவர்கள் கொண்டுவரவேண்டியவை பயிற்சி பெறுபவர்கள் கொண்டுவரக்கூடாதவை வருகை மற்றும் புறப்பாடு உணவும் உடல்நிலையும்

வசதிகள்

தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையில், பல்லாவரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் திருநீர்மலையை அடுத்த திருமுடிவாக்கம் என்ற இடத்தில் அமைதியான சூழலில் 'தம்ம சேது' என்ற விபஸ்ஸனா தியான மையம் நிறுவப்பட்டுள்ளது.

'தம்ம சேது' என்றால் 'தம்மத்தின் பாலம்' என்று பொருள்படும். 18 சதுர ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் நிறுவப்பட்டுள்ள இம்மையம் 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திரு கோயங்காஜி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மைய வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன.

மையத்தின் முக்கிய தம்ம கூடம் 120 நபர்கள் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய வகையில் அமைக்கப்படுள்ளது. கூடுதலாக 75 பேர் அமரக்கூடிய இரண்டு கூடங்களும் உள்ளன. இவற்றைத் தவிர 30 பேருக்கான ஒரு சிறிய தம்ம கூடமும் உள்ளது. மையத்திற்கு முடிசூட்டும் வகையில், மூன்று சுற்றுகளாக 288 தியான அறைகள் கொண்ட பகோடா (விஹாரம்) கட்டப்பட்டு, பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இது திரு கோயங்காஜி அவர்களால் 2006-ம் ஆண்டு மே மாதம் துவக்கிவைக்கப்பட்ட இந்த பகோடா தியானம் செய்ய மிகவும் உகந்த சூழலை உருவாக்கும்.

தற்சமயம் இந்த மையத்தில் ஒரே சமயத்தில் 96 ஆடவரும், 48 மகளிரும் தங்கியிருந்து தியானப் பயிற்சி பெற வசதியான இரு-படுக்கைகள் கொண்ட அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையிலும் குளியலறை இணைக்கப்பட்டுள்ளது. குளிக்கும் நீரை சூடேற்றவும் வசதி உண்டு. 200 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக்கூடமும் உள்ளது. முதன்மை ஆசிரியருக்கும், உதவி ஆசிரியர்களுக்குமான இருப்பிடங்களும் அமைந்துள்ளன. தென்னைமரங்களும், செழிப்பான தோட்டமும், நிழலான நடைபாதைகளும் மையத்திற்கு வனப்பு சேர்க்கின்றன.

தம்ம சேது மையத்தில் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாதம் இருமுறை 10-நாள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிவழிகளில் தியானப் பயிற்சி பெறுவோர்க்கு ஒலிநாடா மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பயிற்சி பெறுநர்களின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட சில மற்ற மொழிகளிலும் ஒலிநாடா வழங்க மையத்தில் வசதிகள் உள்ளன. சிறுவர்களுக்கான ஒருநாள் மற்றும் இரண்டு-நாள் முகாம்களும் தம்ம சேது மையத்தில் அவ்வப்பொழுது நடைபெற்று வருகின்றன.

மேலே செல்க

மைய முகவரி

தம்ம சேது விபஸ்ஸனா தியான மையம்,
533, பழந்தண்டலம் சாலை,
(திருநீர்மலை வழி),
திருமுடிவாக்கம்,
சென்னை 600 044.

முகாம் குறித்த விசாரணைகள் மற்றும் விண்ணப்பித்தலுக்கான தொடர்பு எண்கள்:
(அலுவல் நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை; பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை)

    கைபேசி எண்கள்:(+91) 9444021622, (+91) 9444280952, (+91) 9840512103, (+91) 6380364827
    மின்னஞ்சல்: info@setu.dhamma.org, setu.dhamma@gmail.com

மேலே செல்க

நகர் அலுவலகம்

S.K. கோயங்கா
KGI க்ளோதிங்க் பிரைவேட் லிமிடெட்
3/2, சீதம்மாள் சாலை
ஆழ்வார்பேட்டை
சென்னை - 600 018.
இந்தியா.
(எத்திராஜ் கல்யாண மண்டபம் அருகில்)

    தொலைபேசி (தரைவழி): (044) 4340-7000, (044) 4340-7001
    தொலைநகல்: (044) 4201-1177
    கைபேசி: 9840755555
    மின்னஞ்சல்: skgoenka@kgiclothing.in

மேலே செல்க

அமைந்திருக்கும் இடம்

தம்ம சேது மையம் அமைந்திருக்கும் இடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படத்தை இந்த வலைதளத்தில் காணலாம்.

தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல் சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்கையில், சென்னை விமான நிலையத்தைக் கடந்தபின், பல்லாவரம் என்று அழைக்கப்படும் பல்லவபுரம் பேருந்து நிலையத்தையும் கடந்து சென்றால், 'பாண்ட்ஸ்' தொழிற்சாலை அமைந்துள்ளது. இதன் எதிரே வலப்புறம் திரும்பி செல்லும் பாதையில் சுமார் 6.5 கிலோமீட்டர்கள் திருநீர்மலை கோயிலைக் கடந்து பயணித்தால், சிட்கோ தோல் வளாகம் அருமே அமைந்துள்ள தம்ம சேது மையத்தைச் சென்று அடையலாம்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள பூங்கா உள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயிலில் ஏறி, பல்லாவரம் இரயில் நிலையைத்தில் இறங்கவும். அங்கிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு செல்லவும்.

பல்லாவரத்திலிருந்து தடம் எண் 55A கொண்ட பேருந்தில் ஏறி சிட்கோ நிறுத்தத்தில் இறங்கினால், ஐந்து நிமிட நடை தூரத்தில் மையம் அமைந்துள்ளது. மையத்தை உள்ளூர்காரர்கள் சிலர் 'புத்தர் கோயில்' என்று அழைப்பதுண்டு. சில நடத்துனர்கள் மையத்திற்கு இன்னும் அருகிலேயும் பேருந்தை நிறுத்த சம்மதிக்கக்கூடும்.

தாங்கள் விரும்பினால், ஆட்டோவிலும் செல்லலாம். பல்லாவரத்திலிருந்து மையத்தை அடைய ஆட்டோ கட்டணம் சுமார் 200 ரூபாய்கள் ஆகும்.

மேலே செல்க

சென்னை தட்பவெப்பநிலை

சென்னையில் ஆண்டுமுழுவதும் பெரும்பாலும் வெப்பமான சீதோஷ்ண நிலையே நிலவுகிறது. மே மாதத்தின் முடிவிலும், ஜூன் மாதத்தின் ஆரம்பத்திலும் வெப்பம் மிக அதிகமாக, அதாவது அதிகபட்சம் 38 முதல் 42 டிகிரி சென்டிகிரேடு அளவைத் தொடக்கூடிய அளவில், இருக்கும். ஜனவரி மாதமே சென்னையில் வெப்பம் மிகக் குறைவான மாதம். இம்மாதத்தில் குறைந்தபட்ச வெப்பம் 19-20 டிகிரி அளவில் இருக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில், அதாவது நடு-செப்டம்பரிலிருந்து நடு-டிசம்பர் வரை உள்ள காலத்திலேயே சென்னையில் பெரும்பாலும் மழை பெய்கிறது. வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல் காற்றினாலும் சென்னை அவ்வப்பொழுது பாதிக்கப்படுகிறது.

மேலே செல்க

பயிற்சி பெறுபவர்களுக்கு அளிக்கப்படுபவை

 • தியான இருக்கைகள்
 • படுக்கை விரிப்புகள்
 • தலையணை உறைகள்
 • கொசுவலை

மேலே செல்க

பயிற்சி பெறுபவர்கள் கொண்டுவரவேண்டியவை

 • முகாம் நடைபெறும் நாட்களுக்குத் தேவையான அளவு வசதியான, அடக்கமான, தளர்ந்த உடைகள்
 • துண்டுகள் மற்றும் தேவையான சுகாதாரப் பொருட்கள் மற்றும் நறுமணமற்ற ஒப்பனைப் பொருட்கள்
 • பருவமழை காலங்களில் குடை அல்லது ரெயின்கோட்
 • மெழுகுவர்த்திகள், கைவிளக்கு (டார்ச் லைட்)

மேலே செல்க

பயிற்சி பெறுபவர்கள் கொண்டுவரக்கூடாதவை

 • இறுக்கமான, மிக மெல்லிய, வெளிப்படுத்தக்கூடிய அல்லது கவனத்தைக் கவரக்கூடிய உடைகளை மையத்தில் அணியக்கூடாது. ஆண்-பெண் இருபாலரும் அடக்கமான உடைகளையே அணியவேண்டும்
 • புத்தகங்கள், நாட்குறிப்பேடுகள், இதழ்கள், மற்ற படிப்பதற்கான அல்லது எழுதுவதற்கான பொருட்கள்
 • செல்போன்கள், சிறு கம்ப்யூட்டர்கள் முதலியவை. இவை அலாரம் ஒலி எழுப்புவதற்காகவும் பயன்படுத்தக்கூடாது
 • மின்னணு சாதனங்கள்
 • இசைக்கருவிகள்
 • சொந்த உணவுப்பொருட்கள் (கீழே 'உணவும் உடல்நிலையும்' பகுதியைக் காண்க)
 • புகையிலை - எந்த வடிவத்திலும்
 • மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகள்
 • நறுமணப் பொருட்கள்
 • பூஜைப் பொருட்கள், மதச்சார்பான சாதனங்கள்
 • ஆபரணங்கள் முதலிய தேவையற்ற விலை உயர்ந்த பொருட்கள்

மேலே செல்க

வருகை மற்றும் புறப்பாடு

பதிவு செய்துகொள்வதற்கும், இருப்பிடம் சென்று உடைமைகளை சரிபார்த்து வைத்துக் கொள்ளவும் நேரம் இருக்கும் வகையில் முகாம் தொடங்கும் நாள் அன்று மதியம் 2 மணிக்கு மேல் 4 மணிக்கு உள்ளாக மையத்தை வந்து அடையவும். இதுவே முகாமை தாமதம் இன்றி குறித்த காலத்தில் ஆரம்பிக்க உதவும். காலம் கடந்து வருபவர்கள் முகாம் நிர்வாகிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தி அனைவருக்கும் சரிவர ஏற்பாடுகள் செய்ய இயலாமல் போகச் செய்கிறார்கள். ஏதேனும் அவசரக் காரியங்களால் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது வரமுடியாமல் போனாலோ தயவுசெய்து உடனுக்குடனே எங்களுக்குத் தெரிவியுங்கள்.

மாலை 6 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும். அதன் பின்னர் முகாமைக் குறித்த முன்னுரை வழங்கப்படும்.

இறுதி நாள் காலை 7 மணி வரை நீங்கள் முகாம் நடைபெறும் இடத்திலேயே தங்கவேண்டியிருக்கும். காலை 7 மணி அளவில் முகாம் முடிவடைந்தாலும், அறைகளை சுத்தம் செய்துவிட்டுச் செல்ல சற்றே கால அவகாசம் இருக்கும்படி திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அடுத்த முகாமிற்கு மையத்தைத் தயார் செய்ய நாங்கள் உங்கள் உதவியையே நாடுகிறோம்.

முகாமில் சேர உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டபின் உங்கள் நிகழ்ச்சியில் ஏதும் மாறுதல் இருந்தால், தயவுசெய்து உடனே எங்களுக்குத் தெரிவியுங்கள்.

மேலே செல்க

உணவும் உடல்நிலையும்

முகாமில் பங்கேற்போரில் பெரும்பாலனவரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்வண்ணம் எளிய சைவ உணவு அளிக்கப்படும். வெளியிலிருந்து உணவுப்பொருட்கள் மையத்திற்குள் கொண்டுவரக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட உணவை அளிக்க முடியுமா என்பதை முன்கூட்டியே மைய நிர்வாகிகளிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். இவற்றைத் தவிர வேறு சிறப்பு உணவு எதுவும் எங்களால் ஏற்பாடு செய்ய இயலாது.

விபஸ்ஸனா தியான முகாம் என்பது உடலளவிலும், மனதளவிலும் மிகவும் கடினமானதாகும். இந்த பயிற்சியின் கடுமையை நீங்கள் அறிந்து அதற்குத் தயாராக இருக்கவேண்டியது முக்கியம். நீங்கள் விண்ணப்பம் அனுப்பிய பிறகு உங்கள் உடல்நிலையிலோ மனநிலையிலோ ஏதும் மாறுதல் இருந்தால் நீங்கள் முகாமிற்கு வருவதற்கு முன்னர் மையத்தைத் தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்.

தியானம் பயில் வந்திருக்கும் அனைவரின் நலனையும் பாதுகாப்பையும் கருதி நீங்கள் முகாமிற்கு வரும்பொழுது நல்ல உடல்நிலையில் இருப்பது அவசியம். நீங்கள் நோயாளியாக இருந்தாலோ அல்லது முகாமிற்கு முன் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டாலோ, தயவுசெய்து பிரிதொரு முகாமில் பங்கேற்குமாறு உங்கள் வரவை ஒத்திவையுங்கள்.

உணவும் உடல்நிலையும் குறித்த விஷயங்களில் உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் போற்றுகிறோம்.

மேலே செல்க